Wednesday, May 30, 2012

செல்லரிக்காத நினைவுகள்

எனக்கும் உனக்குமான காதல்
துருப்பிடித்த இரும்பைப் போல்
தூரக் கிடக்கிறது...

வெற்றிடத்தை நிரப்பும்
காற்றைப் போல் மனதெங்கும்
வியாபித்திருக்கும் நினைவுகள்
எனக்குள் மட்டுமல்ல...
உனக்குள்ளும்தான்...

உறவுப் பார்வைக்குள்
உன் ஒற்றைப் பார்வை மட்டும்
சத்தமில்லாமல் சண்டையிடுகிறது
பார்த்தும் பார்க்காமல்
காதல் போர்க்களத்தில்
நிராயுதபாணியாய் நான்...

நம்மை தெரிந்த உறவுகள்
கூர்ந்து கவனிக்கின்றன
நம் குழந்தைகளின் பெயரை...
அவர்களுக்குத் தெரியுமா
நம் காதல் செல்லப்பெயர்கள்...



சொந்தமான நமக்குள்
பந்தமற்ற வாழ்வைக் கொடுத்த
கருணையற்ற காலத்தை
நினைத்து மறுதலிக்கும்
மனங்களின் முகவரியாய்
தவிக்கும் கண்கள்...

மணிக்கணக்கில் பேசும் நீ
மனதால் பேசுகிறாய்
எப்போதும் உதிர்க்கும்
ஒற்றைப் புன்னகையை
உலர்வாய் உதிர்த்தபடி...
உறவுகளோடு உறவாய்...
  காதலைச் சுமக்கும்
கல்லறை இதயத்துக்குள்
நீ பூத்த உலர் புன்னகையும்
உலராத புதுவரவாய்...

என் சிந்தைக்குள் நீயும்
உன் சிந்தைக்குள் நானும்
இப்போதும்... எப்போதும்...
செல்லரிக்காத நினைவுகளாய்...

-'பரிவை' சே.குமார்.

நன்றி : படம் இணையத்திலிருந்து

Sunday, May 27, 2012

நாயகன்: நாகேஷ்

நாயகன் அப்படிங்கிற தலைப்புல முதன் முதலில் அஜீத் குறித்து எழுதினேன். அதன் பிறகு நாயகன் எழுதவில்லை... எல்லாமே ஆரம்பிக்கும் போது தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் ஆரம்பமாகிறது. ஆனால் தொடரத்தான் முடிவதில்லை. நாகேஷ் பற்றி படித்த போது அவரைப் பற்றி நாயகனில் எழுதலாமே என்ற எண்ணம் தோன்ற ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி சில தகவல்கள் நாயகனில்...

நாகேஷ்... இந்தப் பெயரே சிரிப்பை வரவைக்கும். ஊரில் ஒல்லியாக இருக்கும் சிலருக்கு நாகேஷ் என்ற பட்டப் பெயரே உண்டு. இன்றைக்கு சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்து விட்டார்கள். ஆனால் எத்தனை பேர் வந்தாலும் நாகேஷ்க்கு என்று இருந்த அந்த இடத்தை யாரும் பிடிக்க முடியவில்லை. தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் வைகைப் புயல் வடிவேலு கருப்பு நாகேஷ் என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார்.

இன்று இருக்கும் சில நகைச்சுவை நடிகர்கள் வரும் சிரிப்பைக்கூட வரவிடாமல் செய்யும் பெரிய அப்பாடக்கர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாகேஷ், என்.எஸ்.கே, தங்கவேலு, சந்திரபாபு என இவர்கள் எல்லாம் திரையரங்கு வரும் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தார்கள்.

அபுதாபியில் திரு. நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசும் போது சிவாஜி ஒருமுறை அவரிடம் "இந்த நாகேஷ், ஆச்சியெல்லாம் நாம கொஞ்சம் ஏமாந்தாலும் தூக்கிச் சாப்பிட்டுடுவாங்க... கவனமா இருக்கணும்..." என்றாராம். அவர் பொறாமையில் சொல்லவில்லை. நாகேஷின் நடிப்பை பார்த்து வியந்ததால் அப்படி சொல்லியிருக்கிறார்.

நாகேஸ்வரன் என்ற பெயர்தான் நாகேஷ் ஆனது. 1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் தேதி தாராபுரத்தில் கன்னடர்கள் அதிகம் வாழும் கொஞ்சிவாடியில் கிருஷ்ணாராவ், ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்த நாகேஷ் பிறப்பால் கன்னட பிராமணர். நாகேசை வீட்டார் அழைக்கும் செல்லப் பெயர் குண்டப்பா. நண்பர்கள் அவரை குண்டுராவ் என்றே அழைப்பார்களாம்.(உடம்புக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்லாமல் வைப்பதுதான் நம் மறபு இல்லையா?)



கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு வந்த அம்மை நோயின் காரணத்தால் முகத்தில் தழும்புகள் தோன்றின. படிக்கும் போதே னடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். படிப்பை முடித்ததும் அப்பா ரயில்வேயில் இருந்ததால் அவருக்கும் ரயில்வே பணி சுலபமாக கிடைத்தது. ரயில்வேயில் பணி புரியும் போதும் அமெச்சூர் நாடகங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை... தொடர்ந்து நடித்து  வந்தார்.

மணியன் அவர்கள் எழுதிய 'டாக்டர் நிர்மலா' என்ற நாடகத்தில் 'தை தண்டபாணி' என்ற பெயரில் 'தை... தை...' என்று சொல்லிக் கொண்டு வரும் நோயாளி கதாபத்திரத்தில் நடித்தார். அதனால் இவருக்கு 'தை' நாகேஷ் என்ற பட்டப் பெயர் உண்டானது. அதுவே பின்னாளில் மருவி 'தாய்' நாகேஷ் ஆனது.

நாடகங்களில் நடித்து வந்த நாகேஷ் 1959 ஆம் ஆண்டு 'தாமரைக்குளம்' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார் வேலையை விட்டுவிட்டு வந்து நடித்த 'தாமரைக்குளம்' படத்தின் மூலம் அவருக்கு பெயரும் வரவில்லை... எதிர்பார்த்த பணமும் வரவில்லை என்பதை நாகேஷே ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தன. பேர் சொல்லிக் கொள்ளும்படியான படமாக எதுவும் அமையவில்லை. இந்த நாட்களில்தான் ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். படத்தின் பல காட்சிகள் நாகேஷைப் பற்றி பேச வைத்தன. குறிப்பாக பாலையா அவர்களிடன் நாகேஷ் கதை சொல்லும் காட்சி இன்று புதிதாக பார்ப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும்.

இயக்குநர் கே.பாலச்சந்தரின் 'சர்வர் சுந்தரம்' படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து தன்னால் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமல்ல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்தார். அதன் பயனாக இயக்குநர் கே. பாலச்சந்தர் தனது 'நீர்க்குமிழி' படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். நாகேஷ் தேன் கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்த பெருமை நம்ம ஆச்சி மனோரமா அவர்களையே சேரும். இரண்டு பேரும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்கள் என்றால் மிகையாகாது. நாகேஷின் நடிப்பில் திருவிளையாடல் தருமியும், தில்லானா மோகனாம்பாள் வைத்தியும் பலராலும் பாராட்டப்பட்ட கதாபாத்திரங்கள் ஆகும்.



நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என கலக்கிய நாகேஷ் வில்லனாக அதுவும் கொடூர வில்லனாகவும் கமலஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில்  நடித்திருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம் போன்ற கமலஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். தசாவதாரம் படம்தான் நாகேஷின் கடைசிப் படம் ஆகும்.

நாகேஷ் ஒரு பேட்டியின் போது "நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த என்னை ரசிகர்கள்தான் நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்" என்று சொல்லியிருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் நாகேஷ் கஷ்டப்பட்ட போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. தனக்குத் தெரிந்த பட முதலாளிகள், டைரக்டர்கள், முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு சின்ன கதாபாத்திரம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டுமானால் என் சம்பளத்தில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள்ளுங்கள்'' என்று சொல்லுவாராம். அவரைப் பற்றி பேசும் போது ''பாலாஜி எனக்குச் செய்த உதவிகளை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று நாகேஷ் பலமுறை கண்கலங்க சொல்லியிருக்கிறார்.

எல்லாரையும் சிரிக்க வைத்த நாகேஷால் கடைசி காலத்திலும் சொந்த வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்பதே உண்மை.


"வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். கலையைக் காப்பாற்றுகிறேன் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஏனென்றால் கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது என்பதை எல்லோரும் நினைத்தால் கலையும் பிழைக்கும்... நாமும் பிழைக்கலாம்" என்பது நாகேஷின் கருத்து.

நாகேஷ் என்ற மகா நடிகன் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இயற்கை எய்தினார். இந்தக் கலைஞன் வாழ்ந்து மறைந்திருந்தாலும் அவர் நடித்த படங்கள் இன்றும் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது... இன்று மட்டுமல்ல இன்னும் பல காலங்கள் சினிமாவின் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

தகவல் திரட்ட உதவிய தமிழ் விக்கிப்பீடியா மற்றும்  நண்பர்களின் இணைய தளங்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

கூகிள் : படங்களுக்கு நன்றி